மாத்தி யோசி – சூழ்நிலை? திறமை?
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் கொஞ்சம் வித்தியாசமான திருடன். அதாவது, உணவுப் பொருட்களை மட்டுமே திருடுவான். மற்றபடி பணம், நகை போன்ற பொருட்களை திருட மாட்டான். அப்படி ஒரு தொழில் தர்மத்தை கடைபிடித்து வந்தான்.
ஒருநாள் அந்த திருடன் ஒரு விவசாயி வீட்டிற்கு திருடச் சென்றான். அங்கே, பல கூடைகளில், தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கள் மற்றும் பழங்கள் வைக்கப் பட்டிருந்தன. அதிலிருந்து ஒரு கூடையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாக, அந்த விவசாயிடம் மாட்டிக் கொண்டான். திருடனை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், அங்கிருந்த ஒரு கம்பத்தில் கட்டிவைத்தார் அந்த விவாசாயி.
மறுநாள் காலை ஊர் மக்கள் கூடி திருடனுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகினர். ஊர் பெரியவர் இது குறித்து விசாரித்தார். திருடியது உறுதியானது. அந்த பெரியவர், திருடனிடம் “கூடையில் என்ன இருக்கிறது என்று தெரியுமா” என்று கேட்டார். திருடன் “தெரியாது” என்று பதிலளித்தான். கூடை திறந்து பார்க்கப்பட்டபோது, அதில், பத்து கிலோ அளவில் தக்காளி பழங்கள் இருந்தன.
அந்த திருடனிடம் பெரியவர், “உனக்கு மூன்று தண்டனைகள் கூறுகிறேன்” அதில் உனக்கு விருப்பமான ஒன்றை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துவது. இரண்டாவது, நூறு சாட்டை அடி வாங்குவது. மூன்றாவது, இந்த கூடையில் இருக்கும் தக்காளி பழங்கள் அனைத்தையும் சாப்பிடுவது. இதில் நீ எதை செய்கிறாய்” என்று கேட்டார். உடனே அந்த திருடன் “தக்காளி பழங்களை சாப்பிடுகிறேன்” என்று என கூறினான்.
அதன்படி கூடையில் இருந்த தக்காளிகளை உற்சாகமாக சாப்பிடத் தொடங்கினான். மூன்று கிலோவுக்கு அதிகமான பழங்களை சாப்பிட்டான். அதற்குமேல் அவனால் சாப்பிட முடியவில்லை.
“ஐயா, மன்னிக்க வேண்டும். என்னால் இவை அனைத்தையும் சாப்பிட முடியாது. எனவே நூறு சாட்டை அடிகளை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறினான்.
அவனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி சாட்டை அடிகள் வழங்கப்பட்டன. முப்பதுக்கும் மேற்பட்ட அடிகளை தாங்கினான். அதற்குமேல் அவனால் அடிதாங்க முடியவில்லை. எனவே, “நான் ஆயிரம் ரூபாய் அபராதமே செலுத்திவிடுகிறேன்” என்று கூறி, அந்தத் தொகையைக் கொடுத்தான்.
உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் இல்லை என்றால் வாழ்க்கையில் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். எனவே, நம்மால் செய்ய முடியக் கூடியவைகளையும், சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு, முடிவெடுக்கக் கூடிய திறமையை வளர்த்துக் கொள்வது முக்கியம் என்பதை உணர்த்துகிறது இந்தக் கதை.
எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. ஆனால் வித்தியாசமான தீர்வை யோசிப்பவன் தான் வாழ்வில் வெற்றி அடைகிறான். அதனால் உங்கள் செயல்களில் புதுமைகளைப் புகுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள். கொஞ்சம் மாத்தி யோசிங்க வெற்றி உங்கள் வசம் தான்.
எல்லோரும்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்களிலிருந்து உங்களை மட்டும் தனித்துக் காட்டுவது எது.. அப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு வந்து விட்டாலே போதும்.. அந்த இடம்தான் நீங்கள் வெல்லப் போகும் முதல் வெற்றி அறிகுறி ஆகும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். எந்த ஒரு செயலையும் எல்லோரையும் போல ஒரே மாதிரி செய்யாமல் மாத்தி யோசி.